23 Dec 2011

கடமை ஆற்றுக!!!

ஒரு புறம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையும் மறு புறம் கூடங்குளம் அணு உலை பிரச்சனையுமாக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமயம் இது. என்ன நடந்தாலும் கூட்டத்தோடு கோவிந்தா போடும் பிராந்திய கட்சிகள். ஒட்டு மொத்த மாநிலமே திரண்டு போராட்டம் நடத்தினாலும் காதில் வாங்காது வெளிநாடுகளுக்கு சென்று அறிக்கை இடும் பிரதமர். இதில் யாரை குறை கூறுவது?
முல்லைப்பெரியாறு அணை

பதவிகளுக்காக வாய்ச் சவடால் அடிக்கும் அரசியல் கட்சிகளோ, சம்பிரதாயத்திற்கு கூச்சலிடும் அரசியல் அமைப்புகளோ எதுவும் செய்யப்போவதில்லை. மத்தியல் ஆட்சி செய்யும் காங்கிரசோ தமிழினத்தினை முழுவதுமாக கொன்று ஒழிப்பதை மறைமுக செயல் திட்டமாக கொண்டு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆம்! ஈழத்தமிழர்களுக்கு மகிந்த ராஜபக்சே!! தமிழக தமிழர்களுக்கு கூடங்குளம் அணு உலை!!!


இவர்கள் இப்படி என்றால் சனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களாக தம்மை வர்ணித்துக் கொள்ளும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இப்பிரச்சனை நெருப்பில் குளிர் காயவே செய்கின்றன. இப்பிரச்சனையில் மாத்திரமல்ல மக்களை பாதிக்கும் எல்லா விசயங்களிலும் பாராமுகமாகவே தான் நடந்து கொள்கின்றன. அதிலும் தமிழக பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக மட்டுமே செயல்படுகின்றன. ஏன், முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தமிழர்களை விறகு கட்டைகளாக எரித்துக் கொன்றொழித்தப் போது கூட சிரி! சிரி!! என சிரிப்பொலி எழுப்பியவை தானே இந்த ஊடகங்கள்.

        இன்றும் கூட ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூன்று தமிழர்களை விடுவிக்க கோரி தமிழகமே கூடி நின்ற போது அத்தமிழர்களின் உயிரை எடுத்தே ஆக வேண்டுமென காங்கிரசு மேலிடத்தின் ஏவலை வாலாட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தை ஒளிபரப்பிக் கொண்டுதானே இருக்கிறது வசந்த் & கோ வின் வசந்த் தொலைக்காட்சி? முதலில் அடித்து நொறுக்கப்பட வேண்டியது தமிழக காங்கிரசாரும் வசந்த் & கோ போன்ற காங்கிரசாரின் நிறுவனங்கள் தானே!!!

ஆனால் மறுபுறம் கேரள ஊடகங்களோ தமது மக்களை முல்லைப்பெரியாறு பிரச்சனையில் திட்டமிட்டு அணி திரட்டுகின்றன. 24 மணி நேரமும் உலகில் ஏதேனும் ஒரு திசையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்அல்லாஹூ அக்பர்என்ற சொற்களைப் போல ஏதேனும் ஒரு மலையாள ஊடகம் முல்லைப்பெரியாறு பிரச்சனையை இடைவிடாமல் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றன. முன்னாளில் ஆட்சி செய்தவர்கள், இந்நாளில் ஆட்சி செய்பவர்கள், கிறித்தவ பாதரியார், பல்வேறு அமைப்பை சேர்ந்த களப்பணியாளர்கள் என பல்வேறு தரப்பைச் சார்ந்தவர்கள நேரடியாக மக்களைச் சந்திக்கச் செய்கின்றன கேரள ஊடகங்கள்.
இங்கே ஏதேனும் ஒரு ஊடகமாவது முல்லைப்பெரியாறுக்கு ஆதரவாக மக்களைச் சந்தித்ததுண்டா? தமிழககேரள எல்லையில் லட்சக்கணக்கில்  திரண்டு போராடும் இம்மக்கள் எந்த கட்சியையும் அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல. தங்களது வாழ்வுரிமை பறிபோவதைக் கண்டு தாங்களாக திரண்டவர்கள். இவ்வாறு திரண்ட மக்களை அராஜகவாதிகளைப் போலவும், தமிழர்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் மலையாளிகளை சனநாயகவாதிகளாகவும் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கும் மலையாள ஊடகங்களுக்கு இங்குள்ள ஊடகங்களின் பதில் என்ன?

ஊடக/பத்திரிக்கை நண்பர்களே! கேரளத்தின் இந்தப் பொய்ப்பிரச்சாரங்களுக்கெல்லாம் உங்கள் பதில் என்ன!!
 
கேரளத்தில் மலையாள மனோரமா உள்ளிட்ட ஊடகங்கள் மக்களின் பகுதிக்கே சென்று இப்பொழுது இருக்கும் அணையின் வரலாறு, அணை உடைந்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், புதிய அணை கட்டப்பட வேண்டியதன் அவசியம் போன்ற தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றன. அது மாத்திரமல்ல, அணை விசயத்தில் கேரளத்திற்கு எதிராக பேசும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட யாராகினும் அவர்கள் யார், அவர்களின் பின்புலம் என்ன என்பது பற்றிய தகவல்களைக் கூட மக்களுக்குத் தெள்ளத்தெளிவாகக் கொண்டு சேர்த்து மக்களுக்கு நம்பிக்கையாக நடந்து கொள்கின்றன.
 
மலையாள சகோதரர்களே! முல்லைப்பெரியாறு அணையால்

         எங்களுக்கு!!!                                                             உங்களுக்கு!!!
 
இங்கிருக்கும் ஊடகங்கள் ஏதேனும் தமிழக மக்களுக்கு அணை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுண்டா? ஏன்! குறைந்தபட்சம் தமிழக பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள குறுந்தகடையாவது இந்த ஊடகங்கள் ஒளிபரப்பினவா? ஏன் தினமும் ஒளிபரப்பாகும் தங்களது நெடுந்தொடர்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமோ?
உண்மை என்பது எங்கும், எப்பொழுதும், யாருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும். மலையாளிகளுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழர்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஆக, ஒன்று தமிழகத்தின் பக்கம் உண்மை இருக்க வேண்டும் அல்லது கேரளத்தின் பக்கம்  உண்மை இருக்க வேண்டும். உண்மை எப்பக்கம் இருந்தாலும் அதை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டியது ஊடக தர்மம். ஆனால் கேரள ஊடகங்களோ இங்கிருந்து செல்லும் தமிழர்களை நைய்ய புடைத்து விட்டு மலையாளிகளை அகிம்சா மூர்த்திகளாக திரித்துக் கூறிக் கொண்டிருக்கும் போது தமிழக ஊடகங்கள் வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பது ஏன்?
 
 இவ்வூடகங்களின் அலுவலகங்களின் மீது ஒரு கல் விழுந்தால் கூட பத்திரிக்கை/ஊடக தர்மமே மாண்டுவிட்டதாக கூச்சலிடும் இவ்வூடகங்கள் இப்பொழுது மக்களின் வாழ்வாதரமே பறிபோகும் போது வாய் மூடி இருப்பது ஏனோ? தமிழகத்தின் மேதைகளாகவும் அறிவுஜீவிகளாகவும் தங்களை பாவித்துக் கொள்ளும் ஊடகவியலாளர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் இவ்விசயத்தில் ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன?
குறைந்தபட்சம் கேரளத்தில் இருக்கும் நடுநிலையான பத்திரிக்கையாளர்கள் / ஊடகவியலாளர்கள் மற்றும் சனநாயகவாதிகளுடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக முல்லைப்பெரியாறு அணை விசயத்தில் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் கபட நாடகங்களை மக்களிடம் அம்பலப்படுத்த முடியாதா?
   
மேலே உள்ள படங்கள் 1876 – 1878 இல் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டவை. இப்பஞ்சத்தைக் கண்டு மனம் பதைத்த பொறியாளர் பென்னிகுயிக் எதிர் காலத்தில் இது போன்ற அவல நிலையை தவிர்க்கவே முல்லைப்பெரியாறு அணையைக் கட்டினார். கேரளத்தின் பொய்ப்பிரச்சாரத்திற்கு பலியாகி அணை உரிமையை இழப்போமேயானால் நாளை நாமோ நமது தலைமுறையோ மேலே உள்ள படங்களில் இருக்கக்கூடும்!!!

இன்றைய மிகமுக்கிய தேவை இருதரப்பிலிருக்கும் நடுநிலையாளர்களின் கூட்டு முயற்சிதான். ஏனெனில் இக்கூட்டு முயற்சியில் பெறப்படும் முடிவுகள் இரு மாநிலத்திலும் ஒரே மாதிரியாகப் பரப்பப்படும் போது தேவையற்ற பொய் பிரச்சாரத்திற்கு இடமில்லாமல் ஆக்கிவிட முடியும். ஆரம்பத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் பத்திரிக்கையாளர்கள் / ஊடகவியலாளர்கள் இடையேயான இத்தகைய கூட்டு முயற்சி அணைப் பிரச்சனையில் மிகப்பெரிய மாற்றத்தை நிச்சயமாக கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்விரு தரப்பினரிடையேயான கூட்டு முயற்சி பத்திரிக்கையாளர்கள் / ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமல்ல, எழுத்தாளர்கள், கலைஞர்கள், முற்போக்காளர்கள், அறிவுஜீவிகள், பெண்ணியவாதிகள் என அனைத்து தரப்பினரிடையேயும் வேண்டும். வாய்ச்சவடால்கள், ஆற்றலையும் நேரத்தையும் வீணாக்கும் முறையற்ற திட்டமிடாத போராட்டங்கள் ஆகியவற்றை விட்டொழித்து ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்வோம்.
      தமிழக ஊடகங்களே! பண்டிகை தினங்களிலும் பொது விடுமுறை தினங்களிலும் நடிகைகள் நடிகர்களின் பின்னாள் நாக்கை நொங்கவிட்டு அலைய நேரமிருக்கும் உங்களுக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு செலவிட நேரமில்லாமல் போகுமானால் இன்று கேரள நிறுவனங்களின் மீது பொழியப்படும் கற்கள் நாளை உங்கள் மீதும் பொழியப்படக்கூடும் நண்பர்களே!!!






17 Dec 2011

பதிவு

இந்த வலை மனை நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தொடக்கி உள்ளேன். அனைவரும் ஆதரவு தரவும். தங்களது கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.