22 Jan 2012

பூம்புகார் பயண புகைப்படங்கள்


பூம்புகார் பயண புகைப்படங்கள்
                                
                                - இலட்சுமி



          பூம்புகார், நாகை மாவட்டம் மேலையூரில் உள்ளது. அக்கோட்டம் முற்றிலும் கருங்கல்லால் ஆன கட்டுமானம்; அதன் விமானம் சதுர அமைப்புடையது. விமானத்தின் நான்கு மூலைகளிலும் கர்ணக் கூடம் உள்ளது.


              அங்குள்ள கண்ணகி சிலை சாந்தமான அமைதியான நிலையில் கையில் சிலம்புடன் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் கண்ணகி திருநாள் கொண்டாடப்படுகிறது.





      தொல்பொருள் ஆய்வாளர்களால் மேலையூர் பகுதியிலுள்ள பல்லவனீச்சுரம் திருக்கோயிலுக்கு வடக்கே நகரத்தார் வீடுதிக்குக் கிழக்குப் பகுதியில் இந்த விகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

              இங்கு புத்தரை வழிபாடு செய்வதற்கும் துறவிகள் தங்குவதற்கும் ஏற்ற வகையில் ஐந்து அறை கொண்டு கட்டப்பட்டுள்ளது. முன்பகுதியில் உயர்ந்த மேடையும், இடையில் தாழ்ந்த நிலையில் நீண்ட திண்ணையும், அதனை அடுத்துத் துறவிகள் தியானம் செய்வதற்கு ஏற்ற வகையில் ஐந்து அறைகளும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. அறைகள் 3.5 மீட்டர் சதுர வடிவில் உள்ளன. இக்கட்டிடம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தாக இருக்கலாம்  எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் காணப்படும் புத்த ஷைதியம், முன்னதற்கு வேறான வடிவத்தில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தாக இருக்கலாம்  எனக் கணக்கிடப்பட்டுள்ளது.



               இதில் பல வடிவத்தில் சிறு அறைகள் காணப்படுகின்றன. இதில் உள்ள ஓர் அறையில் புத்தரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு வெண்ணிற சலவைக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அவஸ்திகம், ஸ்ரீவத்சம், பூர்ணக்கும்பம் போன்ற திருச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு. மேலும் இங்குள்ள ஓர் அறையில் தியான நிலையில் அமர்ந்த கோலத்தில் மூன்று அங்குலத்தில் புத்தரின் செப்புத்திருமேனியும் கிடைத்துள்ளது. தென்னகத்தில் முதன் முதலாக புத்த விகாரை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியாக இவ்விடம் கருதப்படுகிறது.


                திருமேனிப்பள்ளம் என்னுமிடத்தில் இந்நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 2 மீட்டர் உயரமுள்ள செங்கற்சுவருக்கு இடையே 83 செ.மீ அகலமுள்ள நீர் வெளியேறும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. நீர் வெளியேறும் போது அதன் வேகத்தைக் குறைக்கும் வகையில் இருபக்கமும் அரைவட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நில அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக நீர் செல்லும் பாதையில் கல் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. இருபக்க வளைவுகளும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது கி.பி. 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தாக கருதப்படுகிறது.



                   
நகரின் காவல் தெய்வமான சம்பாபதி கோயில் மேலையூர் சாய்க்காட்டுத் திருக்கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் இப்போது சிதைந்த நிலையில் உள்ளது. இதன் கருவறை வடக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் உள்ளே செல்லும் வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 



              நேர்பார்வையில் செல்லக்கூடாதென அஞ்சி சந்நிதிக்கு நேர் அமைந்த சுவரில் இரண்டு அடி சதுர வடிவ வாயில் ஒன்று சுவாமியைப் பார்க்குமாறு அமைந்துள்ளது. வெளியே பலிபீடம் உள்ளது. 





               இங்கு இரண்டு ஆண், பெண் பூத வடிவங்கள் செங்கற்களால் கட்டி வெண்சுதை பூசப்பட்டுள்ளது. இது கி.பி 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.  






                      மேலையூர் பகுதியில் கிடைக்கப்பெற்ற தங்க முலாம் பூசப்பெற்ற மைத்ரேயர் சிலை. இதன் காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு. இது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.